NATIONAL

நீதிபதி நஸ்லானுக்கு எதிரான விசாரணை முறையாக நடைபெறவில்லை- மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

புத்ராஜெயா, பிப் 24- மேல்முறையீட்டு நீதிபதி டத்தோ முகமது நஸ்லான் முகமது கசாலிக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) மேற்கொண்ட விசாரணை நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாமல் நடத்தப்பட்டது என மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்த விசாரணையை நடத்திய விதம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தியது உள்ளிட்டவை நீதித்துறையின் நம்பகத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அமையவில்லை என்று தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான எழுவர் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் தெரிவித்தது.

நீதித்துறையுடன் கலந்தாலோசிக்காமல் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணை நேர்மையாகவும் குரோத உணர்வு இன்றியும் நடத்தப்பட்டதா என்பதில் சந்தேகம் உள்ளதாக அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றபுலனாய்வு அமைப்புகள் தலைமை நீதிபதியின் அனுமதியின்றி விசாரணையின் உள்ளடக்கங்களை, உண்மைகளை வெளிப்படுத்தவோ விளம்பரப்படுத்தவோ கூடாது என்பதோடு விசாரணையின் முழு உள்ளடக்கமும் எந்நேரமும் இரகசியமாக வைக்கப்பட வேண்டும் தெங்கு மைமுன் கூறினார்.

பணியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிப்பதில் குற்றப்புலனாய்வு அமைப்புகளுக்கு உள்ள அதிகாரம் தொடர்பில் வழக்கறிஞர்களான ஹரிஸ் ஃபாதிலா முகமது இப்ராஹிம், நோர் அய்ன் முஸ்தாபா மற்றும் ஸ்ரீகாந்த் பிள்ளை ஆகியோர் முன்வைத்த இரு கேள்விகள் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த முடிவினை
ஏகமனதாக அறிவித்திருந்தது.


Pengarang :