NATIONAL

போலி வங்கிக் கணக்கைக் காட்டி ஷா ஆலம் மாநகர் மன்றத்தை ஏமாற்றியதாகக் குத்தகையாளர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், பிப் 24 - ஷா ஆலம் மாநகர் மன்றத்தை ஏமாற்றுவதற்காகப் போலி வங்கி கணக்கறிக்கையைச் சமர்ப்பித்ததாக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் 
குத்தகையாளர் ஒருவர் மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மாநகர் மன்றத்தை ஏமாற்றுவதற்காக ஒரு நிறுவனத்தின் போலி வங்கி 
கணக்கறிக்கையைத் தயாரிக்கும்படி ஆடவர் ஒருவருக்குக் கடந்த 2021 ஆம் ஆண்டு 
அக்டோபர் 30, நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆம் தேதிகளில் உத்தரவிட்டதாகச் 
சைரி நோர்ஹாஃபி (வயது 57) என்பவர் மீது குற்றஞ்சாட்டப்படுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரையிலானச் சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 471 வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட 109 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

வங்கிக் கணக்கறிக்கைகள் போலியானவை எனத் தெரிந்தும் அவற்றை 
உண்மையானவைப் போல் பயன்படுத்துவதில் மற்றொரு நபருக்கு உடந்தையாக 
இருந்ததாக மேலும் ஆறு தேர்வுக் குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்கியுள்ளார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் டெண்டர் 
மற்றும் பொருள் அளவை அலுவலகத்தில் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாக அவருக்கு 
எதிரான குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான துணை 
பப்ளிக் புரோசிகியூட்டர் ஏ.கலைவாணி, குற்றஞ்சாட்டப் பட்டவரை ஒரு நபர் 
உத்தரவாதத்துடன் 40,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க பரிந்துரைத்தார்.

அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 40,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி 
வழங்கிய நீதிபதி ரோஸிலா சாலே, அனைத்துலகக் கடப்பிதழை நீதிமன்றத்தில் 
சமரப்பிக்கவும் மாதம் ஒரு முறை எம்.ஏ.சி.சி  அலுவலகத்தில்  கையெழுத்திடவும் 
உத்தரவிட்டார்

Pengarang :