NATIONAL

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மிகப்பெரிய பட்ஜெட் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்- பிரதமர்

புத்ராஜெயா, பிப் 27- மிகப்பெரிய பட்ஜெட் பற்றாக்குறைக்கு வழி வகுக்கும் என்பதால் கடந்த வாரம் தாக்கல் செய்த 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அறிவிக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.

பட்ஜெட் பற்றாக்குறை பெரியதாக இருக்கும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் நாட்டின் மீதான நம்பிக்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.

தற்போது 5.6 விழுக்காடாக இருக்கும் பட்ஜெட் பற்றாக்குறையுடன் கூடிய 1.5 ட்ரிலியன் கடன் நமக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. சம்பள உயர்வை அறிவித்தால் பட்ஜெட் பற்றாக்குறை 6.5 விழுக்காடாக உயரும். நாட்டை வழிநடத்துவதற்குரிய வலுவான அரசியல் இல்லை எனக் கருதி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் நாட்டில் முதலீடு செய்ய
வரமாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு நடைபெற்ற இஸ்மாபோபியா ஆய்வரங்கில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

2023 வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக அரசு ஊழியர்களின் சம்பள முறையை மறுஆய்வு செய்ய அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்று கியூபெக்ஸ் எனப்படும் அரசு ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் டத்தோ அட்னான் மாட் கூறியிருந்தது தொடர்பில் அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார்.

எனினும், சம்பள உயர்வு விவகாரத்தில் கியூபெக்ஸ் பொறுமை காக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் தற்போதைய தலையாயக் குறிக்கோளாக உள்ளது என்றார்.


Pengarang :