NATIONAL

கஞ்சா கடத்தல் வழக்கில் எதிர்வாதம் புரிய முன்னாள் வானொலி அறிவிப்பாளருக்கு உத்தரவு

கோலாலம்பூர், பிப் 27- ஈராண்டுகளுக்கு முன்னர் கஞ்சா கடத்தியதாகச் சுமத்தப்பட்ட வழக்கில் எதிர்வாதம் புரிய முன்னாள் வானொலி அறிவிப்பாளரான இஸ்மாஹலில் ஹம்சாவுக்கு இங்குள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் பூர்வாங்க விசாரணையின் போது 49 வயதான இஸ்மாஹலில் மீதான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளதை அரசுத் தரப்பு நிருபித்ததைத் தொடர்ந்து நீதிபதி டத்தோ முகமது ஜமில் ஹூசேன் இந்த முடிவை அறிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் அறையில் இருந்த போதைப் பொருள் அடங்கிய 22 பொட்டலங்களும் அவரின் கட்டுப்பாட்டிலும் பாதுகாப்பிலும் இருந்ததை நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாகத் தனது சுருக்கமான தீர்ப்பில் அவர் கூறினார்.

அந்த அறையை முற்றுகையிட்ட போலீசார் சட்டத்திற்குப் புறம்பான பொருள்கள் ஏதும் உள்ளதா என வினவிய போது குற்றஞ்சாட்டப்பட்டவரே தரையில் இருந்த போதைப் பொருள் அடங்கிய பேக் ஒன்றை எடுத்து போலீஸ்காரர்களிடம் ஒப்படைத்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 21ஆம் தேதி மாலை 5.35 மணிக்கு வாங்சா மாஜூ, ஜாலான் செமராக்கில் உள்ள வீடொன்றில் 374.6 கிராம் எடை கொண்ட கஞ்சாவை வைத்திருந்ததாக இஸ்மாஹலில் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் 1952ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டத்தின் 39பி(1)(ஏ) மற்றும் அதே சட்டத்தின் 39பி(2) பிரிவுகளின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.


Pengarang :