NATIONAL

மருத்துவமனைகளில் நெரிசல் பிரச்சனையைக் கையளச் சிறப்பு பணிக்குழு- மக்களவையில் தகவல்

ஷா ஆலம், பி 28- நோயாளிகள் அதிகரிப்பினால் அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காணப் பொதுத் துறை சீர்திருத்த சிறப்பு பணிக்குழுவை (ஸ்டார்) அரசாங்கம் அமைக்கவிருக்கிறது.

அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி தலைமையிலான இந்த குழு இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசுப் கூறினார்.

மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், நமது சிறப்பான சேவைத் தரம் காரணமாக அரசாங்க மருத்துவமனைகள் மீது பொது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனால் இம்மருத்துவமனைகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன என்று அவர் சொன்னார்.

இது தவிர, அரசாங்க மருத்துவமனைகளில் நாம் விதிக்கும் கட்டணம் ஏறக்குறைய இலவசச் சேவைக்கு இணையானதுதான். மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு, புதிதாகப் பல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருப்பதோடு பழைய மருத்துவமனைகள், சுகாதார கிளினிக்குகள், கிராமக் கிளினிக்குகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இருந்த போதிலும் மருத்துவமனைகளில் நெரிசல் பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது என்றார் அவர்.

மக்களவையில் இன்று சிபு தொகுதி ஹராப்பான் உறுப்பினர் ஆஸ்கார் லிங் சாய் இயு எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2022 வரை நாடு முழுவதும் 149 அரசாங்க மருத்துவமனைகள், 209 தனியார் மருத்துவமனைகள் உள்பட மொத்தம் 355 மருத்துவமனைகள் உள்ளன. இது தவிர 11,577 கிளினிக்குகளும் உள்ளன. அவற்றில் 8,419 கிளினிக்குகளைத் தனியார் நடத்தும் வேளையில் 3,158 கிளினிக்குகள் அரசாங்கத்தின் கீழ் உள்ளன என்று ஃபாடிலா தெரிவித்தார்.


Pengarang :