NATIONAL

தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சியை (டிவிஇடி) மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு RM800 கட்டண நிதியுதவி பரிசீலிக்கப்படும்

ஷா ஆலம், பிப் 28: தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சியை (டிவிஇடி) மேற்கொள்ளும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் RM800 கட்டண நிதியுதவி வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

தொழிற்கல்வியை மேற்கொள்ளும் இளைஞர்களுக்குக் குறிப்பாகப் பூர்வக்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கட்டணம் ஒரு தடையாக இருக்கலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.

தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சியை ஊக்குவிக்கவும், அக்கல்வியை மேற்கொள்ளும் பூர்வக்குடி மற்றும் கிராமப்புற இளைஞர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பென்தோங் பிரதிநிதி யங் சைஃபுரா ஒத்மானின் கூடுதல் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, இந்த ஆண்டு தொழில்துறை மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுடன் (ஜிஎல்சி) 50 ஒப்பந்தங்கள் (MoA) கையெழுத்திடுவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி மொத்தம் 360,000 அதாவது 15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் இக்கல்வி திட்டத்தில் பங்கேற்று உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :