NATIONAL

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே அனுமதி- நாடாளுமன்றத்தில் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 1- இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாதத் துறை அமைச்சர் முகமது சாபு கூறினார்.

குறுகியக் காலத்தில் முட்டைகளை விநியோகம் செய்வதில் அந்நிறுவனத்திற்கு உள்ள ஆற்றலைக் கருத்தில் கொண்டு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி ஆறு மாதக் காலத்திற்கு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குப்
பிரத்தியேக அனுமதி வழங்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

கட்டாரில் கடந்தாண்டு நடைபெற்ற ஃபிபா உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் போது இந்தியாவிலிருந்து கட்டாருக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்ய அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மற்றும் அந்நிறுவனத்தின் அனுபவம் ஆகியவற்றை பொறுத்து இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

மக்களவையில் இன்று தாசேக் குளுகோர் தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் எழுப்பிய கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் அவர் இதனைத் தெரவித்தார்.

நாட்டில் நிலவும் முட்டைக்கான தேவையை ஈடுசெய்யும் பொருட்டு தற்காலிக அடிப்படையில் அந்த உணவு மூலப் பொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.


Pengarang :