NATIONAL

கார் ஓட்டுனரும் அதன் பயணியும் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்திற்காகக் கைது

கோலாலம்பூர், மார்ச் 5: கடந்த வெள்ளியன்று ஜாலான் ஈப்போ, பத்து 5 யில் ஏற்பட்ட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநரையும் அதன் பயணியையும் போதைப்பொருள் உட்கொண்டிருந்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்தனர்.

செந்தூல் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி பெஹ் எங் லாய் கூறுகையில், சிறுநீர் பரிசோதனை உட்படுத்தப்பட்ட பின்னர் இருவரும் கோலாலம்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நண்பகல் 12.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நிசான் சென்ட்ரா காரின் வாகன ஓட்டுனர் (25) உறங்கியதால் அவருக்கு முன்னால் இருந்த ஹினோ லோரியின் பின்புறத்தில் மோதியதாக நம்பப்படுகிறது.

“மோதலின் விளைவாக, லோரி முன்னோக்கி நகர்ந்து, அச்சமயம் அதே பாதையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கீழே விழுந்தார். எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று பெஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கார் ஓட்டுனரையும் அதன் பயணியையும் சந்தேகத்தின் அடிப்படையில், சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்த கோலாலம்பூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் பெஹ் கூறினார்.

“இருவருக்கும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது பரிசோதனையின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இரண்டு சந்தேக நபர்களும் சாலை போக்குவரத்து சட்டம் 1959 (பிரிவு 10 LN 166/59) விதிமுறை 10 மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டனர், என்றார்.

– பெர்னாமா


Pengarang :