NATIONAL

காவல்துறையினர் ஒருவர் தனது மனைவியைச் சுட்டுக் கொன்றார்

கங்கார், மார்ச் 5: சிம்பாங் அம்பாட்டில் உள்ள கம்போங் பெண்டாங் பாருவில் இன்று காலை காவல் துறையினர் ஒருவர் தனது மனைவியைச் சுட்டுக் கொன்றார்.

கங்கார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி யுஷரிபுடின் முகமட் யூசோப் கூறுகையில், சந்தேக நபரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அவரின் மைத்துனர் என்று நம்பப்படும் ஒருவரிடமிருந்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

“காலை 8 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த போது, பணியில் இருந்த உறுப்பினர்கள் சந்தேக நபரைத் தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் முடியவில்லை. இதனால் காலை 9 மணியளவில் காவல்துறையினர் அவ்வீட்டைச் சோதனை செய்தனர்,” என்று அவர் கூறினார்.

சந்தேக நபரை கைது செய்ததோடு அவர் பயன்படுத்திய துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்ததாக யுஷரிபுடின் கூறினார்.

“கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபர் தனது 26 வயது மனைவியின் பிரேதத்துடன் படுக்கையறையில் இருந்தார்.

“முதல் கட்ட பரிசோதனையில், இறந்தவரின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கங்கார் துவாங்கு பௌசியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக யுஷரிபுடின் கூறினார்.

கொலைக்கான தண்டனை சட்டம் 302 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், நாளை காவல்துறைக்கு ரிமாண்ட் உத்தரவு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தின் நோக்கம் குறித்து நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம் என்று மேலும் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :