NATIONAL

எம்எச் 370 விமானம் எந்த தடயமும் இல்லாமல் காணாமல் போய் ஒன்பது ஆண்டுகள் நிறைவடையவுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 6: மலேசியன் ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்) விமானம் எம் எச் 370 தொடர்பான விசாரணையையோ அல்லது தேடுதலையோ ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நேற்று வலியுறுத்தினார்.

மார்ச் 8, 2014 அன்று நடந்த துயரச் சம்பவத்தை மலேசிய அரசாங்கம் ஒருபோதும் மறக்க வில்லை என்றும் புதிய நம்பகமான தகவல்கள் கிடைத்தால் அவ் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணி மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அவர் கூறுகையில், எம்எச்370 விமானம் எந்த தடயமும் இல்லாமல் காணாமல் போயி ஒன்பது ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. அந்த விமானத்திற்கு உண்மையில் என்ன ஆனது என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆயிரம் கேள்விகள் உள்ளன.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த 239 பயணிகள் மற்றும் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் துயரத்தை எந்த ஆறுதல் வார்த்தைகளும் அதனைக் குணப்படுத்த அல்லது துயர் துடைக்கவோ முடியாது என்று லோக் கூறினார்.

“மலேசியர்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள், இந்த துயரத்தின் சுமையைக் பகிர்ந்து கொள்வார்கள். இழந்த அனைத்து உயிர்களையும் நாங்கள் மதிக்கிறோம், அவர்களை ஒருபோதும் மறக்க மாட்டோம், ”என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

– பெர்னாமா


Pengarang :