NATIONAL

ஜொகூர் மாநிலத்திற்கு வெள்ள மீட்பு சாதனங்களை வழங்கச் சிலாங்கூர் தயார்- மந்திரி புசார்

கோல லங்காட், மார்ச் 6- அவசியம் ஏற்படும் பட்சத்தில் ஜொகூர் மாநிலத்திற்குப் படகு மற்றும் மீட்பு சாதனங்களை வழங்கச் சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது.

இத்தகைய உதவிகளைக் கோரி ஜொகூர் அரசிடமிருந்து இதுவரை எந்த விண்ணப்பமும் கிடைக்கவில்லை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அம்மாநில நிர்வாகம் இதுவரை எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. காரணம், மீட்பு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட உபகரணங்களை விநியோகிக்கும் பணியை நட்மா 
எனப்படும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் வாயிலாக மத்திய அரசு மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.

தேவை ஏற்படும் பட்சத்தில் மீட்பு உபகரணங்களை  வழங்க நாங்கள் எந்நேரமும் 
தயாராக இருக்கிறோம். இருந்த போதிலும் அங்கு குழப்ப நிலை ஏற்படும் அளவுக்கு 
அவசரப்பட்டு உதவிப் பொருள்களை அனுப்பத் தயாராக இல்லை என்றார் அவர்.

பந்திங், வாட்டர்ஃபுரோண்டில் நேற்று நடைபெற்ற கோல லங்காட் மாவட்ட நிலையிலான ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டாம் கட்ட உதவிக் குழு அம்மாநிலத்திற்கு அனுப்பப்படும் என்றும் அவர் சொன்னார்.

மனுக்குல மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜொகூர் மாநில 
ஆட்சிக்குழு உறுப்பினரைத் தொடர்பு கொண்டுள்ளார். துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக மாநில அரசின் "பந்தாஸ்" குழு அங்கு அனுப்பப்படும் என்றார் 
அவர்.

Pengarang :