NATIONAL

வெள்ளம் காரணமாக ஆறு மாவட்டங்களில் 48 துணை மின் நிலையங்கள் மூடப்பட்டன

ஜொகூர் பாரு, மார்ச் 6- ஜொகூரில் பத்து மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெள்ளம் காரணமாகப் பாதுகாப்பு கருதி 48 துணை மின் நிலையங்களைத் தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் மூடியுள்ளது.

இதன் காரணமாகச் சிகாமாட், குளுவாங், பத்து பகாட், கோத்தா திங்கி, மெர்சிங், மூவார் ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள 48,000 வாடிக்கையாளர்களுக்கு மின் தடை ஏற்பட்டதாக ஜொகூர் மாநிலத் தெனாகா நேஷனல் தலைவர் முகமது நோ முகமது சேத் கூறினார்.

யோங் பெங், பத்து பஹாட், கோத்தா திங்கி, குளுவாங், சிகாமாட் பாரு,  புக்கிட் கெப்போங், ஆகிர நகரங்களை உள்ளடக்கிய 36 இடங்களில் நேற்று காலை மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். மூடப்பட்ட மொத்த  துணை மின் நிலையங்களின் எண்ணிக்கை 280 ஆகும்.

எனினும், வெள்ளம் வடிந்தப் பகுதிகளில் உள்ள 82 மின் நிலையங்களில் மின் விநியோகம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. வெள்ளம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு அந்த மின் நிலையங்கள் மூடப்பட்டன என்றார் அவர்.

வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் வீடுகளில் உள்ள மின் இணைப்பின் பிரதான சுவிட்சை அடைக்கும் அதேவேளையில் அனைத்து மின் சாதனங்களின் பிளக்குகளை அகற்றிவிடும்படி பொது மக்களை அவர் வலியுறுத்தினார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின் இணைப்பை மீண்டும் ஏற்படுத்துவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட குத்தகையாளரைக் கொண்டு மின் கம்பிகளைச் சோதனையிடும்படி அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :