NATIONAL

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது விபத்து- ஒருவர் மரணம், மற்றொருவர் படுகாயம்

ஷா ஆலம், மார்ச், 6- சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்த வேளையில் மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி கடுமையான காயங்களுக்குள்ளானார்.

இச்சம்பவம் கிள்ளான், பெர்சியாரான் ராஜா மூடா மூசா சாலையில் நேற்று அதிகாலை நிகழ்ந்ததாகக் கிள்ளான் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி ச்சா ஹூங் ஃபோங் கூறினார்.

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கும்பல் ஒன்று காம்ப்ளெக்ஸ் சுக்கான் பண்டமாரான் பகுதியிலிருந்து கோலக் கிள்ளான் நோக்கி மோட்டார் சைக்கிள்களைப் படுவேகத்திலும் ஆபத்தான முறையிலும் செலுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.

இப்பந்தயத்தின் போது 19 வயதுடைய இரு இளைஞர்கள் செலுத்திய மோட்டார் சைக்கிள்கள் ஒன்றை ஒன்று உரசியதைத் தொடர்ந்து அவர்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்ததாக அவர் தெரிவித்தார்.

படுகாயங்களுக்குள்ளான அவ்விருவரும் விடியற்காலை 2.30 மணியளவில் சிகிச்சைக்காகக் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

எனினும், அவர்களில் ஒருவர் இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் ஏற்பட்ட கடும் பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பலன்றி விடியற்காலை 6.50 மணியளவில் உயிரிழந்தார் என ஏசிபி ச்சா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்ட மற்ற மோட்டார் சைக்கிளோட்டிகளை அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகச் சொன்னார்.


Pengarang :