NATIONAL

டாயேஷ் பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடைய சமூக வலைத்தளங்கள் மீது தீவிரக் கண்காணிப்பு

கோலாலம்பூர், மார்ச் 6- உள்நாட்டைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபடி டாயேஷ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இந்நாட்டைச் சேர்ந்த சில சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகளை அரசு மலேசியப் போலீஸ் படை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோர்டிக் பயங்கரவாதத் தடுப்பு ஒருங்கமைப்பின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அச்செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகத் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

பொது மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அந்த பயங்கரவாத அமைப்பு சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வரும் பிரசார நடவடிக்கைகளை அரச மலேசியப் போலீஸ் படை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டுள்ளதோடு அதனைத் தீவிரமாகக் கண்காணித்தும் வருவதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இது போன்ற பிரசாரங்களில் ஈடுபடும் தரப்பினரைக் கண்காணிப்பதற்காக வட்டார பாதுகாப்புத் தரப்பினருடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் காவல் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைளில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக அனைத்து துறைகளும் ஆக்ககரமான பங்கினை இந்த நடவடிக்கையில் வழங்கி வருகின்றன என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டின் பாதுகாப்பு முழுக் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறிய அவர், ஊடகத் தகவல்களைக் கண்டு சஞ்சலமடைய வேண்டாம் என்று பொது மக்கள் கேட்டுக் கொண்டார்.


Pengarang :