NATIONAL

கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை, இறப்பு விகிதம் கடந்த வாரம் அதிகரிப்பு

கோலாலம்பூர், மார்ச் 7- ஒன்பதாவது நோய்த் தொற்று வாரத்தில்  ஒவ்வொரு 100,000 பேர் என்ற அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்த ஒன்று முதல் ஐந்தாம் நிலை வரையிலான கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 8ஆம் நோய்த் தொற்று வாரத்தை விட 33 விழுக்காடு அதிகரிப்பு கண்டுள்ளது.

எட்டாவது நோய்த் தொற்று வாரம் மற்றும் பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரையிலான ஒன்பதாவது நோய்த் தொற்று வாரத்திற்கு இடையிலான புதிய கோவிட்-19 சம்பவங்கள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்பான வேறுபாட்டை பார்க்கையில் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை 5.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர்
நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அதே சமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8.8 விழுக்காடு குறைந்துள்ளதோடு மரண எண்ணிக்கையும் 300 விழுக்காடு அதிகரித்து எட்டாக உயர்ந்துள்ளது என்று அவர் சொன்னார்.

நாடு முழுவதும் உள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களில் (சி.ஏ.சி.) கண்காணிக்கப்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையும் சற்று குறைந்து காணப்படுகிறது. கடந்த எட்டாவது நோய்த் தொற்று வாரத்தில் சி.ஏ.சி. மையங்களுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 12.2 விழுக்காடாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 321.7 விழுக்காடு அதிகரித்த வேளையில் சி.ஏ.சி. மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14.3 விழுக்காடு குறைந்துள்ளது என்றார் அவர்.

கடந்த 2020 ஜனவரி மாதம் 25ஆம் தேதி முதல் இவ்வாண்டு மார்ச் 4ஆம் தேதி வரை கோவிட்-19 நோய் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 43 ஆயிரத்து 626 பேராகும் எனக் கூறிய அவர், நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 97 ஆயிரத்து 806ஆகப் பதிவாகியுள்ளது என்றார்.


Pengarang :