SELANGOR

கட்டாய முகக்கவரி உத்தரவு பின்பற்றப்படுவதை எம்.பி.எஸ்.ஏ. ஆறு மாதங்களுக்குக் கண்காணிக்கும்

ஷா ஆலம், மார்ச் 8- உணவக நடத்துநர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாய முகக்கவரி உத்தரவைப் பின்பற்றுவதை உறுதி செய்ய ஷா ஆலம் மாநகர் மன்றம் ஆறு மாதகாலக் கண்காணிப்பை மேற்கொள்ளும்.

இந்த கட்டாய முகக்கவரி நிபந்தனை அமலுக்கு வந்த ஜனவரி முதல் தேதி தொடங்கி ஆறு மாதங்களுக்கு இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஷா ஆலம் மாநகர் மன்ற துணை டத்தோ பண்டார் இஞ்சினியர் செரேமி தர்மான் கூறினார்.

அந்த விதிமுறை கடந்த ஜனவரி அமலாக்கப்பட்டது முதல் நாங்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதோடு பணியாளர்கள் முகக்கவரி அணிவதை ஊக்குவித்தும் வருகிறோம். ஜூன் முதல் தேதிக்குப் பின்னர் இதன் அமலாக்கத்தைக் கட்டாயப்படுத்துவோம் என்றார் அவர்.

ரமலான் மாதச் சந்தைக்கான பெர்மிட்டுகள் வழங்கப்படுவதை முன்னிட்டு இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற முகக்கவசம் அணியும் பிரசார இயக்கம் மற்றும் எம்.பி.எஸ்.ஏ. இ- பென்ஜாஜா முறையின் அமலாக்கம் ஆகிய நிகழ்வுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உணவகப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவரி அணிவதைக் கட்டயமாக்கும் உத்தரவை ஷா ஆலம் மாநகர் மன்றம் கடந்த ஜனவரி 1ஆம் தேதி அமல்படுத்தியது.

இவ்வாண்டு தொடங்கி உணவக லைசென்ஸ்களுக்கான புதிய நிபந்தனையாகவும் கட்டாய முகக்கவரி சேர்க்கப்பட்டது.


Pengarang :