SELANGOR

மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை

சுபாங் ஜெயா, மார்ச் 8- நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மாற்றுத் 
திறனாளிகளின் எண்ணிக்கை 15 விழுக்காடாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்து அத்தரப்பினருக்கு நட்புறவான பொது வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் தொடக்கக்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எளிதான மற்றும் பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் நீண்ட ஆயுட்காலம் காரணமாக  அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கையும் 
கவனத்தில் கொள்ளப்படும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு 
உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார். 

எதிர் காலத்தில் நமது மக்களில் 15 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக 
இருப்பார்கள் என்று உலகச் சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. 20 சதவீத மக்கள் 80 
ஆண்டுகள் வரை நீண்ட காலம் வாழ்வதால் நாமே மாற்றுத்  திறனாளிகளாக மாறும் சாத்தியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே இப்போதிருந்தே தயார் செய்யவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனைகள் அதிகமாகும். மாற்றுத் திறனாளிகளின் தேவைக்கேற்ப உள்கட்டமைப்பில் பல 
மாற்றங்களை செய்ய அப்போது அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றார் அவர்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான விழிப்புணர்வு (நட்புமிக்க பொது 
வசதிகளை உருவாக்குதல்) இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கட்டிடக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்கள் இதற்கு தயாராக 
இருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று சன்வே ரிசார்ட் ஹோட்டலில் கித்தா சிலாங்கூர் மாநாட்டையொட்டி 
நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு சொன்னார்.

மாநிலத்தின் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டமான முதலாவது சிலாங்கூர் திட்டத்தில்  
கவனம் செலுத்தும் தரப்பினரில் மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர்.
இது வரை கிட்டத்தட்ட 90,000 மாற்றுத் திறனாளிகள் சிலாங்கூரில் பதிவு 
செய்யப்பட்டுள்ளனர்.

Pengarang :