NATIONAL

லோரியிலிருந்து கழன்ற சக்கரம் சாலையோர வணிகர்களைத் தாக்கியது- இளைஞர் பரிதாப மரணம்

பண்டார் பெர்மைசூரி, மார்ச் 8- ஓடிக்கொண்டிருந்த லோரியிலிருந்து கழன்ற சக்கரம் சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்து இரு இளைஞர்களைத் தாக்கியது.

நேற்று மாலை கோலத் திரங்கானு-கம்போங் ராஜா, ஜாலான் பந்தாய் 43வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த இந்த கோரச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தோடு மேலும் ஒருவர் கடுமையான காயங்களுக்குள்ளானார்.

கோல திரங்கானு, கம்போங் மெங்காபாங் பாஞ்சாங்கைச் சேர்ந்த முகமது அய்ரில் ரிஸ்மான் நசாரி (வயது 18) மற்றும் நிக் முகமது அபிக் ரிசானி முகமது ஜைனானி (வயது 22) அகிய இருவரும் நேற்று மாலை 5.00 மணியளவில் சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அந்த சம்பவம் நிகழ்ந்ததாக செத்தியு மாவட்டப் போலீஸ் தலைவர்
டி.எஸ்.பி. அப்பாண்டி ஹூசேன் கூறினார்.

அந்த லோரி கம்போங் மாராங்கிலிருந்து கம்போங் தெலாகா பாப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதன் பின்புறச் சக்கரம் திடீரென கழன்று சாலையோரம் வீசப்பட்டதாக அவர் சொன்னார்.

சாலையோரத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த முகமது அய்ரில் மற்றும் நிக் முகமதுவை அந்த சக்கரம் தாக்கியது. நெஞ்சில் பலத்தக் காயங்களுக்குள்ளான முகமது அய்ரில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் நிக் முகமதுவுக்கு வலது கை, முகம் ஆகியவற்றில் பலத்தக் காயம் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் கிளந்தானைச் சேர்ந்த 37 வயது லோரி ஓட்டுநருக்குக் காயம் ஏற்படவில்லை என அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனைக்காக அந்த லோரி செத்தியூ மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது என்றார் அவர்.


Pengarang :