NATIONAL

சிலாங்கூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மத்திய அரசின் உதவி கிடைக்க மாநில அரசு முயலும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13- கடந்த  2021 டிசம்பர் இறுதியில் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மத்திய அரசிடம் இருந்து இன்னும் நிதியுதவி  
கிடைக்காதவர்களுக்கு உதவ சிலாங்கூர் அரசு முயற்சிக்கும்.

இந்த விவகாரத்தை ஐ.சியு. எனப்படும் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவுக்குக்  கொண்டுச் செல்லும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைப் பழுது பார்ப்பது மற்றும் மின்சாரப் 
பொருட்களுக்கான இழப்பீடாக 2,500 வெள்ளி வழங்குவது உள்ளிட்டவை மத்திய அரசின் உதவித் திட்டங்களில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

இந்த விவகாரத்தில் குறிப்பாக, ஐ.சி.யு வுடன்  இணைப்பைச் சரிபடுத்துவதில் எங்கள் அதிகாரிகள் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று  பெட்டாலிங் மாவட்ட 
அளவிலான கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வை இங்குள்ள டேசா மெந்தாரியில் தொடங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் பாதிக்கப்பட்ட 132,000 குடும்பங்களுக்குப் "பந்துவான் சிலாங்கூர் பங்கிட்" (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகையை மாநில அரசு  விநியோகித்து முடித்துவிட்டதாகவும் அமிருடின் தெரிவித்தார்.

மொத்தம் 13 கோடியே 20 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட உதவி திட்டம்  தொடர்பாக 
எந்த பிரச்சனையும் எழவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2021 டிசம்பர் 18ஆம் தேதியன்று மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து மாநில அரசு பி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட 
மக்களுக்கு உதவி நிதி வழங்க 10 கோடி வெள்ளியை ஒதுக்கியது.

வெள்ளத்தினால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளைச் மறுசீரமைப்புக்குச் செய்வது 
தவிர்த்து  கூடுதலாக, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு 10,000 வெள்ளியும் பொருள் இழப்பை எதிர்நோக்கிய குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

Pengarang :