SELANGOR

கம்போங் டத்தோ ஹருண் வீட்டுடமைப் பிரச்சனைக்குத் தீர்வு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13- இங்குள்ள கம்போங் டத்தோ ஹருண், பி.ஜே.எஸ். 1 
பகுதியைச் சேர்ந்த 249 குடும்பங்களைக் கடந்த 15 ஆண்டுகளாக எதிர்நோக்கி வந்த  குடியேற்றப் பிரச்சனை மாநில அரசின் முயற்சியால் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டது.

மேம்பாட்டாளருடன் காணப்பட்ட  இரு தரப்புக்கும் பாதகமில்லாத் தீர்வின் விளைவாக 
அந்த குடியேற்றவாசிகள் விவேக வாடகைத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் 
பெற்றதாக  மந்திரி புசார் கூறினார்.

வாடகைக் கொள்முதல் கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு வீட்டு உரிமை 
வழங்கப்பட்டது. தொடக்கத்தில் வாடகைக்கு இருந்து பின்னர் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 15 வருடங்களாக நிலுவையில் இருந்த இந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டதுதான் இதில் முக்கியமான விஷயமாகும். மேம்பாட்டாளர் வழங்கிய ஒத்துழைப்பினால் இதனை நிறைவு செய்ய முடிந்தது என்று அவர் கூறினார்.

பெட்டாலிங் மாவட்ட அளவிலான கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வை இங்குள்ள  டேசா மெந்தாரி 3, எம்பிபிஜே விளையாட்டு மைதானத்தில் நேற்று துவக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

எதிர்காலத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் சொந்த வீடு பெற உதவும் நோககில் மாநில அரசு வாடகை கொள்முதல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

முன்பு விவேக வாடகைத் திட்டம் (2ஸ்தேய்) என்று அறியப்பட்ட இந்த முன்னெடுப்பு சிலாங்கூர் வாடகைக் கொள்முதல்  திட்டம் என பின்னர் மறுபெயரிடப்பட்டது.

இந்த இரண்டு கட்டத் விவேக வாடகைத்  திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம்  இரண்டு 
முதல் ஐந்து ஆண்டுகள் வாடகைக்கு இருந்து வீட்டின் முழு உரிமையைப் பெறலாம்.  செலுத்தப்பட்ட வாடகைத் தொகையில் 30 சதவீதம் முன்பணத்தில் சேர்க்கப்பட்டு 
மீதமுள்ள தொகையைத் தவணைகளில் செலுத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

Pengarang :