NATIONAL

வெ.50 லட்சம் சட்டவிரோதப் பணத்தைப் பெற்றதாக மொகிதீன் மீது ஷா ஆலம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு

ஷா ஆலம், மார்ச் 13- சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்ட 50 லட்ச வெள்ளியைப் பெற்றதாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன்  யாசின் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி ரோஸிலா சாலே முன்னிலையில் தமக்கெதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை 75 வயதான மொகிதீன் மறுத்து விசாரணை கோரினார்.

குற்றச்சாட்டு எனக்குப் புரிகிறது. நான் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோருகிறேன் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் கிடைக்கப்பெற்றதாக நம்பப்படும் 50 லட்சம் வெள்ளியைப் பெர்சத்து கட்சியின் தலைவர் என்ற முறையில் புக்ஹாரி இக்குய்ட்டி சென். பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து பெற்று கடந்த 2022 ஜனவரி 7ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, ஆம்கோர்ப் மாலில் உள்ள
ஏம்பேங்க் வங்கி கிளையில் உள்ள அக்கட்சியின் கணக்கில் சேர்த்ததாக
மொகிதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மீது 2001ஆம் ஆண்டு பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைத் தடைச் சட்டத்தின் 4(1)(பி) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட அதே சட்டத்தின் 87(1) பிரிவு மற்றும் தண்டனை வழங்க வகை செய்யும் அதே சட்டத்தின் 4(1) பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்குக் கூடுதல் பட்சம் 15 ஆண்டுச் சிறைத்தண்டனை, 50 லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது சட்டவிரோத நடவடிக்கை மூலம் பெறப்பட்ட பணத்தில் ஐந்து மடங்குத் தொகை இவற்றில் அதிகப்பட்சத் தொகை அபராதமாக விதிக்கப்படும்.

முன்னதாக, கோலாலம்பூர் நீதிமன்றம் மொகிதீனுக்கு கடந்த வாரம் விதித்த இரு நபர் உத்தரவாதத்துடன் கூடிய 20 லட்சம் வெள்ளி ஜாமீன் மற்றும் அனைத்துலகக் கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை இந்த வழக்கிலும் பயன்படுத்த வேண்டும் என ஊழல் தடுப்பூ ஆணையத்தின் வழக்கறிஞர் அகமது அக்ராம் காரிப் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குடன் இந்த வழக்கிற்கும் தொடர்புள்ளதால் இவ்வழக்கையும் அதே நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கும் தாம் விண்ணப்பிப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசுத் தரப்பின் இந்த விண்ணப்பங்களுக்கு மொகிதீனின் வழக்கறிஞரான டத்தோ கே.குமரேந்திரன் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயித்த 20 லட்சம் வெள்ளி ஜாமீன் மற்றும் கடப்பிதழ் பறிமுதல் ஆகிய நிபந்தனைகளை இந்த நீதிமன்றமும் பயன்படுத்துவதாகக் கூறிய நீதிபதி, இந்த வழக்கை
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றும் விண்ணப்பத்திற்கும்
அனுமதி வழங்கினார்.

பெர்சத்து கட்சிக்கு சட்டவிரோதமான முறையில் பணம் பெற்றது தொடர்பில் மொகிதீன் மீது கோலாலபூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆறு குற்றச்சாட்டுகள் கடந்த மார்ச் 10ஆம் தேதி சுமத்தப்பட்டன.


Pengarang :