NATIONAL

பள்ளிவாசல்கள் அரசியல் களமாக மாறுவதால் முஸ்லீம்களிடையே பிளவு உண்டாகும்- சுல்தான் கவலை

ஷா ஆலம், மார்ச் 13- கட்சி சார்ந்த அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களைப் பயன்படுத்தும் கலாச்சாரம் முஸ்லீம்கள் குறிப்பாக மலாய்க்காரர்களிடையே பிளவு ஏற்பட வழி வகுக்கும் என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கவலை தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்கள் மத்தியில் பகைமைப் போக்கும் சச்சரவுகளும் ஏற்பட பள்ளிவாசல்களும் சூராவ்களும் ஒருபோதும் காரணமாக இருக்கக் கூடாது என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

முடிவே இல்லாத மாறுபட்ட அரசியல் சித்தாந்தம் மற்றும் அரசியல் பழிவாங்கும் போக்கு காரணமாக முஸ்லீகளுக்குடையே இடைவெளி அதிகரிப்பதற்குரிய சூழல் உருவாகும் என்று இன்று மாநில சட்டமன்றக்கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

அவ்விரு சமய வழிபாட்டுத் தலங்களும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்யும்படி சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் (மாய்ஸ்) மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகாவை (ஜாய்ஸ்) தாம் மீண்டும் கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.

பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களில் சமய உரையாற்றும் ஒரு சிலர் மாறுபட்ட அரசியல் சித்தாந்தம் காரணமாக எதிர்த்தரப்பினரைச் சிறுமைப்படுத்துவது, ஏளனப்படுத்துவது, அவமதிப்பது, நிந்திப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய செயல்களை விரைந்து தடுக்காவிட்டால் முஸ்லீம்கள் குறிப்பாக மலாய்க்காரர்கள் மத்தியில் பிளவு உண்டாகும் என்று நான் அஞ்சுகிறேன் என அவர் சொன்னார்.

பள்ளிவாசல்களின் சமய உரை, பிரசங்கம், மற்றும் வகுப்புகளை நடத்துவதற்கு மாய்ஸ்சிடமிருந்து அங்கீகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :