NATIONAL

சிலாங்கூர் அரசின் 46 நலத்திட்டங்களில் பங்கேற்பீர்- மாநில மக்களுக்குச் சுல்தான் வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 13- மாநில அரசு அமல்படுத்தியுள்ள இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள 46 நலத் திட்டங்களில் பங்கேற்று பயனடையுமாறு மாநில மக்களை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களுக்குப் பயன்தரும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை ஐ.எஸ்.பி. கட்டமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசின் நடவடிக்கையைத் தாம் பாராட்டுவதாகச் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகக் கல்வி, சமூக நலன், வீட்டுடைமை, மனித மூலதனம், சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களை அந்த 46 திட்டங்களும் உள்ளடக்கியுள்ளன என்று அவர் சொன்னார்.

தகுதி உள்ள மாநில மக்கள் இந்த ஐ.எஸ்.பி. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனுகூலங்களைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று மாநில சட்டமன்றக் கூட்டத்தை இன்று தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 3,600 வெள்ளி ரொக்க நிதியுதவியை வழங்கக்கூடிய பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தை மாநில அரசு இவ்வாண்டும் தொடரவுள்ளது.

குறைந்த வருமானம் பெறக்கூடிய 30,000 குடும்பங்கள் பயன்பெறக்கூடிய இந்த திட்டத்திற்கு மாநில அரசு 10 கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :