NATIONAL

பெட்ரோனாஸ் நிறுவனத்தின் லாபம் 10,160 கோடி வெள்ளியாக அதிகரிப்பு

கோலாலம்பூர், மார்ச் 14- நாட்டின் தேசியப் பெட்ரோல் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ் கடந்தாண்டு மிகச் சிறப்பான அடைவுநிலையைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2022 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் அந்நிறுவனம் 10,160 கோடி வெள்ளியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்தாண்டு 5,090 கோடி வெள்ளியாக இருந்த அந்நிறுவனத்தின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 51 விழுக்காடு அதிகமாகும்.

சிறப்பான சந்தை நிலையே பெட்ரோனாஸ் நிறுவனத்தின் இந்த அபரிமித
வளர்சிக்கு காரணமாக விளங்குகிறது. அந்நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அதிக வருமானத்தை ஈட்டிய ஆண்டாக கடந்த 2022 திகழ்கிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு 24,800 கோடி வெள்ளியாக இருந்த அதன் வருமானம் கடந்தாண்டு சுமார் 100 விழுக்காடு அதிகரித்து 37,530 கோடி வெள்ளியாகப் பதிவாகியுள்ளது.

பெட்ரோலியப் பொருள்களுக்கான ஊக்கமூட்டும் வகையிலான விலை மற்றும் உயரிய அளவுகோல் விலை ஆகிய காரணங்களால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பானதாக அமைந்துள்ளது.

வட்டி, வரி, மதிப்புச் சரிவு ஆகியவற்றுக்கு முந்தைய வருமானமும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 70 விழுக்காடு உயர்வு கண்டு 17ஆயிரத்து 70 கோடி வெள்ளியாக ஆகியுள்ளது.


Pengarang :