SELANGOR

தேசிய “மைக்ரோமொபிலிட்டி” வாகனப் பாதுகாப்பு தினத்தில் 2,000 பேர் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், மார்ச் 14: சுமார் 2,000 ஷா ஆலம் குடியிருப்பாளர்கள் மார்ச் 11 அன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய “மைக்ரோமொபிலிட்டி” வாகனப் பாதுகாப்பு தினத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு டத்தாரான் மெர்டேகாவில் நடைபெற்றது.

ஷா ஆலம் மாநகராட்சியின் (MBSA) கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவு, இந்த திட்டம் மிகவும் சிக்கனமான, எளிமையான மற்றும் நிலையான பொது போக்குவரத்து முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறியது.

“இந்தத் திட்டத்திற்கு மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமும் (MIROS) அதன் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது,” என்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மலேசியப் போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லாஹ் அவர்கள் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஷா ஆலம் மேயர் டாக்டர். நோர் ஃபுவாத் அப்துல் ஹமீதும் கலந்து கொண்டார்.

‘மைக்ரோமொபிலிட்டி’ வாகனம் என்பது மின்சார மூலத்தால் இயக்கப்படும் வாகனம் ஆகும். இது மணிக்கு அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகம் கொண்டது.

நிகழ்வில் அதிர்ஷ்டக் குலுக்கு, கலாச்சார நடன நிகழ்ச்சிகள், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பல நிகழ்ச்சிகளும் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பயன்படுத்தப்பட்ட பொருட்களை இலவசமாக மறுவிநியோகம் செய்யும் இகோ ப்பிரி மார்கெட் ‘Eco Free Market’ திட்டமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த திட்டத்தின் மூலம் வருகையாளர்கள் தண்ணீர் போத்தல்கள், கண்ணாடி போத்தல்கள், கேன்கள் மற்றும் பழைய செய்தித்தாள்கள் போன்ற மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை கொடுத்து கூப்பன்களைப் பெற்று கொள்ளலாம்.


Pengarang :