NATIONAL

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைவிடப்பட்ட குளங்களில் சோலார் தகடுகள் பொருத்தப்படும்

ஷா ஆலம், மார்ச் 14- பெரிய அளவில் சோலார் எனப்படும் ஒளியீர்ப்புத் தகடு தோட்டங்களை அமைப்பதற்கு ஏதுவாக கைவிடப்பட்ட குளங்கள் உள்பட பொருத்தமான இடங்களை மாநில அரசு தேடி வருகிறது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகச் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் பசுமைத் தொழிற்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

இது தவிர, கட்டிடங்களில் குறிப்பாக மாநில அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் சோலார் தகடுகளைப் பொருத்துவதற்கான திட்டத்தையும் மாநில அரசு கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

குப்பைகளை எரிப்பதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்க முடியும் என்பதால் கோல சிலாங்கூர் மாவட்டத்தின் ஜெரம் மற்றும் கோல லங்காட் மாவட்டத்தின் தஞ்சோங் டுவா பிலாசில் கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று புக்கிட் அந்தாரா பங்சா தொகுதி பெர்சத்து உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.


Pengarang :