NATIONAL

சிலாங்கூர் விளையாட்டுத் தொகுதிக்கு பொது மக்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் பரிந்துரைகள்

ஷா ஆலம், மார்ச 14- சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ.) அண்மையில் செய்திருந்த ஷா ஆலம் விளையாட்டரங்கம் (கே.எஸ்.எஸ்.ஏ.) தொடர்பான கண்காட்சியில் அத்திட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் பெறப்பட்டன.

ஷா ஆலம் எஸ்.ஏ.சி.சி. பேரங்காடியில் ஜனவரி 26 முதல் பிப்ரவரி 10 வரை நடத்தப்பட்ட அந்த கண்காட்சியின் போது நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் பொது மக்கள் இந்த பரிந்துரைகளைச் சமர்ப்பித்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மொத்தம் 171.816 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் இந்த அரங்கிற்கான செலவுத் தொகை மதிப்பீடு செய்யப்பட்டப் பின்னரே அடுத்தக் கட்ட நகர்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

விளையாட்டுத் தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் 50 விழுக்காட்டுப் பகுதியில் அரங்கம் அமைக்கப்படும். 30 விழுக்காடு பூங்கா மற்றும் பசுமைப் பகுதியாக நிலைநிறுத்தப்படும். எஞ்சிய மாநில அரசினால் நிர்வகிக்கப்படும் வர்த்தக மையங்கள் உருவாக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

அருகிலுள்ள நிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் நிலப் பரிமாற்றம் உள்பட இத்திட்டத்திற்கான மொத்தச் செலவினம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது கட்டுமானப் பணியைத் தொடங்குவதற்கான அனுமதி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நமக்கு கிடைத்து விடும் என்று அவர் மாநிலச் சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

மலேசியன் ரிசோர்சஸ் கார்ப்ரேஷன் பெர்ஹாட் நிறுவனத்துடன் அரசாங்க- தனியார் கூட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த விளையாட்டுத் தொகுதியின் கட்டுமானப் பணிகள் இவ்வாண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என்று அமிருடின் முன்னதாகக் கூறியிருந்தார்.


Pengarang :