NATIONAL

மாநில அரசின் இலவசச் சட்டச் சேவைக்கு வெ.30,000 செலவு, 15 வழக்குகளுக்குத் தீர்வு- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், மார்ச் 15:  சிலாங்கூர் சட்ட உதவித் நிதித் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட் 10 லட்சம் வெள்ளியில் 29,820 வெள்ளியை மாநில அரசு இதுவரை செலவிட்டுள்ளதாகப் பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

கடந்தாண்டு செப்டம்பர் தொடங்கி இவ்வாண்டு மார்ச் மாதம் வரையிலான ஆறு மாதக் காலத்தில் இந்த நிதி செலவிடப்பட்டதாக மாநக்ச் சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
இலவசச் சட்டச் சேவையை வழங்குவதற்காகச் சிலாங்கூர் வழக்கறிஞர் செயல்குழுவிடம் அந்த தொகை ஒப்படைக்கப்பட்டதாகக் கூறிய அவர், இக்காலக்கட்டத்தில் முன்வைக்கப்பட்ட 19 வழக்குகளில் 15 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது என்றார்.

குடும்பப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட 12 புகார்கள் அந்த செயல்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அவற்றில் ஐந்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வேளையில் எஞ்சியவை நீதிமன்ற விசாரணைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளன என்று அவர் சொன்னார்.

எஞ்சிய மூன்று புகார்களும் வேலை தொடர்புடையவையாகும். அவற்றில் ஒரு புகார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில் மற்ற இரண்டும் விசாரணைக்கு முந்தைய பூர்வாங்க கட்டத்தில் உள்ளன என்றார் அவர்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று பெர்மாத்தாங் தொகுதி உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் எழுப்பியக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.


Pengarang :