NATIONAL

ஆளில்லாத 18,740 ஆசிரியர் குடியிருப்புகள் – நாடாளுமன்றத்தில் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 15- கல்வியமைச்சுக்குச் சொந்தமான 47,947 ஆசிரியர் குடியிருப்புகளில் 18,740 காலியாக உள்ளதாக நாடாளுமன்றத்தில்
தெரிவிக்கப்பட்டது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அந்த ஆசிரியர் குடியிருப்புகளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளிட்ட கோணங்களில் ஆய்வினை மேற்கொள்ள சொத்துடைமை ஆலோசக நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கல்வித் துணையமைச்சர் லிம் ஹூய் திங் கூறினார்.

இந்த ஆய்வுப் பணிகள் இவ்வாண்டு இறுதியில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கேள்வி நேரத்தின் போது அவர் சொன்னார். நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் குடியிருப்புகளின் எண்ணிக்கை மற்றும் பழுதடைந்த அக்குடியிருப்புகளைச் சீரமைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பெந்தோங் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் யோங் ஷியாபுரா ஓத்மான் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே, மாணவர்களுக்கான பள்ளி தொடக்க உதவி நிதியைச் சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கில் சேர்ப்பது குறித்து கல்வியமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் லிம் தெரிவித்தார்.

அந்த பணத்தை பட்டுவாடா செய்வதில் காணப்படும் கவனக்குறைவு காரணமாகக் களவுபோகும் சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார். இந்த திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அப்பணத்தைப் பெறுவதற்கு பெற்றோர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும் இயலும் என்றார் அவர்.


Pengarang :