SELANGOR

தனபாலனுக்கு மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பு உபகரணங்கள்- சித்தம் வழங்கியது

ஷா ஆலம், மார்ச் 15- “சித்தம்“ எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் உதவியால் மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பு பட்டறை நடத்தி வரும் எம். தனபாலன் (வயது 38) என்பவருக்கு பழுதுபார்ப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கிள்ளான், தெலுக் புலாய் பகுதியில் தினோ ரேஸிங் எண்டர்பிரைஸ் எனும் பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக மோட்டார் சைக்கிள் பட்டறையை நடத்தி வரும் இவர் சுமார் 10,000 வெள்ளி மதிப்பிலான கனரக மோட்டார் சைக்கிள் லிஃப்ட், பழுதுபார்ப்பு உபகரணப் பெட்டி மற்றும் மோட்டார் சைக்கிள் டயர் மாற்றும் சாதனம் ஆகியவற்றை பெற்றார்.

சித்தம் அமைப்பின் வாயிலாக இந்திய தொழில்முனைவோருக்கு வர்த்தக உபகரணங்கள் வழங்கப்படும் தகவலை பேஸ்புக் மற்றும் நண்பர்கள் வாயிலாக அறிந்து அதற்கு விண்ணப்பம் செய்ததாக தனபாலன் சொன்னார்.

விண்ணப்பம் செய்து ஓராண்டிற்கும் மேலான நிலையில் திடீரென ஒரு நாள் எனது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதாக வந்த செய்தி கேட்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன். வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் பழுதுபார்ப்புப் பணிகளை விரைவாக முடிப்பதற்கும் இந்த சாதனங்கள் பெரிதும் உறுதுணையாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

தனது விண்ணப்பத்தை அங்கீகரித்து இந்த உபகரணங்களை வழங்கி உதவிய சித்தம் பொறுப்பாளர்கள், தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் மற்றும் மாநில அரசுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் கூறினார்.


Pengarang :