NATIONAL

ரிஸாம் இன்னும் பதவி துறக்கவில்லை- சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் கிடையாது

ஷா ஆலம், மார்ச் 15- நடப்பு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தனது பதவியை இன்னும் ராஜினாமா செய்யாத காரணத்தால் புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை.

பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்துள்ள போதிலும் சுங்கை ஆயர் தாவார் தொகுதி உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் தாம் வகித்து வரும் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இன்னும் துறக்கவில்லை என்று மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.

இதன் தொடர்பில் ரிஸாமிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை. இதனால் சட்டமன்றத்திற்கு எந்த பாதகமும் வரவில்லை. எனினும், தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று அவர் தெரிவித்தார்.

சட்ட நெறிப்படி அவர் இந்நேரம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால் மட்டுமே நான் அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுக்க இயலும் என்றார் அவர். இதனிடையே, கூட்டத்தின் போது 87வது கூட்டவிதியைச் சுட்டிக்காட்டிய
புக்கிட் அந்தாராபங்சா உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, எதிர்க்கட்சித்
தலைவர் தொடர்பான நிலைப்பாட்டை சபாநாயகர் தெளிவுபடுத்த
வேண்டும் என்றார்.

ஆரோக்கியமான மற்றும் உகந்த சூழல் ஏற்படுவதற்கு ஏதுவாக சிஜங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே, மற்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும் அனுபவத்தின அடிப்படையில் ரிஸாமுக்கு பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கும் பொருத்தமான வேட்பாளராக அஸ்மின் விளங்குவதாக இங் சொன்னார்.

அஸ்மின் மந்திரி புசாராகவும் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஐந்து தவணைகள் சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பினை ஆற்ற அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :