SELANGOR

இலவசக் குடிநீர்த் திட்டம்- பயனாளிகளின் வருமான வரம்பை 6,000 வெள்ளியாக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

சபாக் பெர்ணம், மார்ச் 20- இருபது கனமீட்டர் நீரை இலவசமாகப் பெறுவதற்கான குறைந்த பட்ச குடும்ப வருமான வரம்பை 6,000 வெள்ளியாக உயர்த்துவதற்கான சாத்தியத்தை சிலாங்கூர் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

இந்த டாருள் ஏசான் இலவச குடிநீர்த் திட்டத்தின் வாயிலாக மாநிலத்திலுள்ள ஆறு லட்சம் குடும்பங்கள் பயனடைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த திட்டத்திற்கு இதுவரை குறைவான விண்ணப்பங்களே கிடைத்துள்ளன. சிலாங்கூர் மாநிலத்தின் வறுமைக் கோட்டு அளவு 6,000 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இத்திட்ட விண்ணப்பதாரர்களின் வருமான வரம்பையும் உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தில் குறைவான எண்ணிக்கையிலானோர் பதிவு செய்வதற்கு இதுவே காரணமாக இருந்தால், அது குறித்து பரிசீலனை செய்து குறைந்தபட்ச வருமான வரம்பை உயர்த்துவதற்கு பரிந்துரை செய்வோம் என்றார் அவர்.

இங்குள்ள பாகான் தெராப்பில் நேற்று நடைபெற் சபாக் பெர்ணம் மாவட்ட நிலையிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த இலவச குடிநீர்த் திட்டத்தில் 600,000 பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளையில் இதுவரை அதில் பாதி பேர் அதாவது 300,000 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர் என அவர் மேலும் சொன்னார்.

இந்த திட்டத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பொதுமக்களிடமிருந்து அதற்கு குறைவான ஆதரவே கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெறக்கூடிய 11.00 வெள்ளி கழிவுத் தொகை என்பது சிறியதாக அவர்களுக்கு தோன்றலாம் அல்லது அந்த சலுகையை பிறர் பெறட்டும் என்ற பெருந்தன்மை காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.


Pengarang :