SELANGOR

சிலாங்கூரில் பிரசித்தி பெற்ற உணவகங்கள் உள்பட 600 இடங்களில் மெனு ரஹ்மா திட்டம் அமல்

ஷா ஆலம், மார்ச் 20- மெனு ரஹ்மா எனும் மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டத்தைத் தன்னார்வலர் அடிப்படையில் அமல்படுத்த நேற்று முன்தினம் வரை சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 600 வர்த்தக வளாகங்கள் பதிவு செய்துள்ளன.

இம்மாதம் 2ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு மெக்டோனால்ஸ், கே.எஃப்.சி., பெர்கர் கிங், ஓல்ட் டவுன் வைட் காஃபி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற உணவகங்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில  இயக்குநர் முகமது ஜூஹாய்ரி மாட் ரேடி கூறினார்.

உணவு சார்ந்து துறைகளில் ஈடுபட்டுள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களும் இந்த மெனு ரஹ்மா திட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றன. இது தவிர மற்ற உணவகத்தினரும் தாங்களாகவே முன்வந்து இத்திட்டத்தை அமல்படுத்துகின்றன என்று அவர் சொன்னார்.

இந்த மெனு ரஹ்மா திட்டத்தில் பதிவு செய்யாத எண்ணற்ற உணவகங்களும் இந்த முன்னெடுப்பில் பங்கெடுத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள செக்சன் 19, டேவான் தெராத்தாயில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலான பயனீட்டாளர் தின நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநில அரசு செயலகத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த பயனீட்டாளர் தினத்தைப் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி முக்னி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்த மெனு ரஹ்மா திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக மாநிலத்திலுள்ள உணவகங்களுடன் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று முகமது ஜவாவி கூறினார்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு காரணமாக சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கிலான இத்திட்டம் நீண்ட காலத்திற்கு நிலையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யத் தாங்கள் விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :