NATIONAL

மூன்று நாள் பயணம் மேற்கொண்டு சிங்கை அதிபர் ஹலிமா மலேசியா வருகை

புத்ராஜெயா, மார்ச் 20- சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்போப் இன்று தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை மலேசியாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்கிறார். கடந்த 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கப்பூர் அதிபர் மலேசியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ வருகை இதுவாகும்.

அதிபர் ஹலிமா தன் கணவர் முகமது அப்துல்லா அல்ஹாப்ஷேவுடன் இந்த வருகையை மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

நாளை 21ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் நடைபெறும் அரச சடங்கின் போது மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அதிபர் ஹலிமாவை வரவேற்பார் என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து மாமன்னருடன் சந்திப்பு நடத்தும் அதிபர், பின்னர் சிங்கை பேராளர் குழுவுக்கு அரண்மனையில் வழங்கப்படும் அரச விருந்திலும் கலந்து கொள்வார்.

அதிபரின் பேராளர் குழுவில் பிரதமர் துறை அமைச்சரும் கல்வி மற்றும் வெளியுறவு விவகாரத் துறைக்கான இரண்டாவது அமைச்சருமான முகமது மலிக்கி ஓஸ்மான், வர்த்தக மற்றும் தொழிலியல் அமைச்சர் லோ யேன் லிங் மற்றும் அந்நாட்டின் உயர் அரசாங்க அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வருகையின் போது அதிபர் ஹலிமா, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் மரியாதை நிமித்தச் சந்திப்பை மேற்கொள்வார். இச்சந்திப்பின் போது இரு தலைவர்களும் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட இரு தரப்பு, வட்டார மற்றும் அனைத்துலக விவாகரங்கள் குறித்து விவாதிப்பர்.


Pengarang :