ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,096ஆக உயர்வு

அங்காரா, மார்ச் 21- தென் துருக்கியில் கடந்த மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,096ஆக உயர்ந்துள்ள வேளையில் மேலும் 107,204 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்நாட்டை உலுக்கிய இந்த மோசமான இயற்கைப் பேரிடரில் 1 கோடியே 35 லட்சம் பேர் பெரும் பாதிப்புக்குள்ளானதாகப் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் யூனுஸ் செஸர் கூறினார்.

கடந்த மாதம் 6ஆம் தேதி ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 7.6 எனப் பதிவான நிலநடுக்கம் அடானா, அடியாமான், டியார்பார்கிர், எலாஜிக், ஹத்தாய், காஜின்தெப், கஹ்ராமானாஸ் உள்ளிட்ட 11 பிரதேசங்களைத் தாக்கியது.

இதனிடையே, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு ஜெர்மன் 25 கோடியே 70 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அன்னாலினா பார்போக் தெரிவித்தார்.

இப்பேரிடரில் நிர்மூலமான நகரங்களை மறுநிர்மாணிப்பு செய்வதில் ஜெர்மனியும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உதவும் என்றும் அவர் சொன்னார். ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரசெல்ஸ் வந்துள்ள அவர் செய்தியாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார்.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ப்பதற்கான உதவிகளை ஜெர்மனியும் ஐரோப்பிய நாடுகளும் விரைந்து வழங்கின. அந்நாட்டை மறுநிர்மாணிப்பு செய்வது தற்போதைய தலையாயக் கடமை என்பதால் அந்த உதவியை நாங்கள் தொடர்ந்து வழங்கவிருக்கிறோம் என அவர் கூறினார்.


Pengarang :