NATIONAL

பேரிடரால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்- பிரதமர்

புத்ராஜெயா, மார்ச் 21- நாட்டில் பேரிடர்களால் ஏற்படும் தாக்கத்தைக்
குறைக்க வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான
நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்படி கருவூல தலைமைச் செயலாளர்
டத்தோ ஜோஹான் மரைக்கான் பணிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சருமான
அவர் தெரிவித்தார்.

ஜோகூரில் வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவுப் பணிகளை
மேற்கொள்வதற்காக சிவில் சேவை தன்னார்வலர் குழுவினரை
வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

பல்வேறு அமைச்சுகள், துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களைச் சேர்ந்த
1,520 அரசுப் பணியாளர்கள் இந்த நிவாரணக் குழுவில் இடம்
பெற்றுள்ளனர். அவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் குறிப்பாக பத்து
பஹாட்டில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வர்.

இந்த குழுவினர் கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், அரசாங்க
கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களைத் துப்புரவு செய்வதில் கவனம்
செலுத்துவர் என்று இன்றைய நிகழ்வு தொடர்பில் பிரதமர் துறை அமைச்சு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோகூர் மாலத்தில் வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவுப் பணிகளில்
உதவும்படி அனைத்து அமைச்சுகளையும் பிரதமர் அன்வார் கடந்த 17ஆம்
தேதி கேட்டுக் கொண்டிருந்தார். இந்நோக்கத்திற்காக கூடுதலாக 15 கோடி
வெள்ளி ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.


Pengarang :