SELANGOR

“டத்தோஸ்ரீ“ விருது விற்பனை மோசடி தொடர்பில் இரு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், மார்ச் 21- சிலாங்கூர் மாநிலத்தின் உயரிய “டத்தோஸ்ரீ“
விருதை ஆறு லட்சம் வெள்ளிக்கு விற்பனை செய்வதாகக் கூறி
மோசடியில் ஈடுபட்ட இரு ஆடவர்கள் மீது இங்குள்ள ஷா ஆலம்
நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இம்மாதம் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் மலாக்கா மற்றும் சிலாங்கூரில்
மேற்கொள்ளப்பட்ட இரு சோதனை நடவடிக்கைகளில் அவ்விரு சந்தேகப்
பேர்வழிகளும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ்
தலைவர் டத்தோஸ்ரீ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

ஆறு லட்சம் வெள்ளியை நன்கொடையாக வழங்க வேண்டும் என்ற
நிபந்தனையுடன் மாநிலத்தின் உயரிய விருதைப் பெறுவதற்காக
நடத்தப்பட்ட பேரத்தில் தாம் ஏமாற்றப்பட்டதாக க் கூறி ஆடவர் ஒருவர்
கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் செய்ததாக அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்ட நபரை நம்ப வைப்பதற்காக அந்த உயரிய விருதினை
வழங்குவது தொடர்பில் அரண்மனை வெளியிட்டதாக கூறப்படும் கடிதம்
ஒன்றையும் சந்தேகப் பேர்வழிகள் வழங்கியுள்ளனர் என்று அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.

எனினும், விருது பெறுவோர் பட்டியலில் தமது பெயர் இல்லாதது கண்டு
அதிர்ச்சியடைந்த அந்நபர் இது குறித்து போலீசில் புகார் செய்தார் என்று
அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் அரண்மனையிடம் தொடர்பு
கொண்ட போது அத்தகைய கடிதம் வெளியிடப்படவில்லை என்பது உறுதி
செய்யப்பட்டதோடு அது போலியான கடிதம் என்பதும்
கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.

அவ்விருவரும் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவுடன் சேர்த்து
வாசிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 34வது பிரிவின் கீழ் இன்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர் என்று அவர் மேலும்
சொன்னார்.

உயரிய விருதுகளை பெற்றுத் தருவதாகக் கூறி அணுகும் தரப்பினரின்
மோசடி வலையில் சிக்க வேண்டாம் என பொது மக்களை ஹூசேன்
கேட்டுக் கொண்டார்.

உயரிய விருதுகளை விற்கும் நடைமுறை ஒருபோதும்
கடைபிடிக்கப்பட்டதில்லை என்பதை காவல் துறையினர் உறுதி
செய்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் சிலாங்கூர் அரண்மனையின்
நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.


Pengarang :