NATIONAL

ஒரு டிக்கெட்டுக்கு ஒரு வெள்ளி மலாயா புலிகள் பாதுகாப்புக்கு வழங்கப்படும்- கால்பந்து சங்கம் அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 23- மலாயா புலிகளைப் பாதுகாக்கும் முயற்சிக்கு
உதவுவதில் மலேசியக் கால்பந்து சங்கம் (எஃப்.ஏ.எம்.) தீவிரம் காட்டி
வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக கால்பந்து போட்டிகளின்
போது விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு வெள்ளி அந்த
புலிகளின் பாதுகாப்புக்கு வழங்கப்படும்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும் மலேசிய கால்பந்து
சங்கமும் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இத்தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலாயா புலிகளை அழிவிலிருந்து காப்பதற்காக இயற்கை வளம்,
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சு எடுத்து வரும்
முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதாக அவ்வறிக்கை கூறியது.

புலிகளைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக விளையாட்டுகளின் போது
விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு வெள்ளி இளைஞர் மற்றும்
விளையாட்டுத் துறை அமைச்சிடம் வழங்குவதற்குக் கடந்த
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த கூட்டமைப்பின் கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டதாக மலேசியக் கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ
ஹமிடான் முகமது அமின் கூறினார்.

மலாயா புலிகளை அழிவிலிருந்து காப்பதற்காக மலேசியக் கால்பந்து
சங்கமும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும் எடுத்து
வரும் முக்கிய முயற்சி இதுவாகும். கால்பந்தாட்டம் நடைபெறும்
ஒவ்வொரு முறையும் புலிகளின் பாதுகாப்புக்காகக் கணிசமான தொகை
வழங்கப்படும் என்றார் அவர்.

இதனிடையே, நாட்டிலுள்ள கால்பந்தாட்டப் பிரியர்கள் அனைவரும்
மலாயா புலிகளைக் காப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிக்குத்
தங்களின் பங்களிப்பை வழங்குமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்
துறை அமைச்சர் ஹன்னா இயோ கேட்டுக் கொண்டார்.


Pengarang :