NATIONAL

“ரிதம்“ அறவாரியத்தின் ஏற்பாட்டிலான வழிகாட்டி வகுப்புகள் மூலம் 200 மாணவிகள் பயன் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 23- ரிதம் அறவாரியத்தின் முதல் கட்ட மஹாராணி
பள்ளித் திட்டம் (எம்.எஸ்.பி.) மூலம் வசதி குறைந்த பி40 தரப்பு இளம்
பெண்களுக்கு ஈராண்டுகள் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களும்
பயிற்சிகளும் ஆக்ககரமான பலனைத் தந்துள்ளன.

கல்வியமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளித் தவணைக்குப் பிந்தைய
இந்த திட்டத்தின் வழி சிலாங்கூரிலுள்ள ஐந்து பள்ளிகளில் பயிலும் 200
மாணவிகளின் வாழ்வில் அபரிமித மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று ரிதம்
அறவாரியத்தின் தலைவர் சாந்தி பெரியசாமி கூறினார்.

கோம்பாக் செத்தியா இடைநிலைப்பள்ளி, பண்டார் ரிஞ்சிங்
இடைநிலைப்பள்ளி, தெங்கு இட்ரிஸ் ஷா இடைநிலைப்பள்ளி, பத்து
உஞ்சோர் இடைநிலைப்பள்ளி, தெங்கு அம்புவான் ஜெமஹா
இடைநிலைப்பள்ளி ஆகி ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் இந்த
திட்டத்தில் பங்கேற்றதாக அவர் சொன்னார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 14 முதல் 16 வயது
வரையிலான மாணவிகள் மென் திறன்களையும் தலைமைத்துவ
ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதில் இந்த திட்டம் பேருதவியாக
இருந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ரிதம் அறவாரியத்தின் பயிற்றுநர்கள் 1,600 மணி நேரத்தை உள்ளடக்கிய
கடந்தாண்டு எட்டு கட்டப் பயிற்சியை அம்மாணவிகளுக்கு வழங்கினர்
என்றார் அவர்.

இந்த முதல் கட்ட மஹராணி பள்ளித் திட்டம் வெற்றிகரமாக
மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தக் கட்டமாக நெகிரி
செம்பிலானில் உள்ள ஐந்து பள்ளிகளில் இத்திட்டத்தை தாங்கள்
விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அவர் சொன்னார்.

கல்வியமைச்சு இந்த திட்டத்தைத் தன் வசப்படுத்தி தேசியப் பாடத்
திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை மாற்றும் எனத் தாங்கள்
எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :