NATIONAL

செமினியில் டீசல் மோசடி நடவடிக்கை முறியடிப்பு- 5,000 லிட்டர் எரிபொருள் பறிமுதல்

புத்ராஜெயா, மார்ச் 23- உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு செமினியில் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றில் டீசல் மோசடிக் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டதோடு 5,000 லிட்டர் டீசலும் கைப்பற்றப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட
“ஓப்ஸ் திரிஸ்“ சோதனை நடவடிக்கையில் இந்த டீசல் மோசடி
அம்பலத்திற்கு வந்ததோடு சம்பவ இடத்திலிருந்து பல்வேறு
உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக அமைச்சின் தலைமைச் செயலாளர்
டத்தோ அஸ்மான் ஆடாம் கூறினார்.

சம்பவ இடத்திலிருந்து 13,250 வெள்ளி மதிப்புள்ள டீசல், மோட்டார் பம்ப்
கருவி, இணைப்புக் குழாய்கள் மற்றும் பல்வேறு ஆவணங்கள்
கைப்பற்றப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிவதற்காக 1961ஆம்
ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டதின் கீழ் விசாரணை அறிக்கை
திறக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, இந்த “ஓப்ஸ் திரிஸ்“ நடவடிக்கையின் வழி கடந்த மார்ச் 1
முதல் மார்ச் 21 வரை நாடு முழுவதும் 2,582 சோதனைகள்
மேற்கொள்ளப்பட்டதாகவும் அவற்றில் 69 மோசடிச் சம்பவங்கள்
வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு 12 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி
மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் டத்தோ அஸ்மான்
சொன்னார்.


Pengarang :