NATIONAL

மது போதையில் குடியிருப்புப் பகுதியில்  சண்டை – 11 பேருக்குத் தண்டனை

ஜொகூர் பாரு, மார்ச் 27: பாசிர் கூடாங்கில் தாமான் சந்தனா குடியிருப்புப் பகுதியில் மார்ச் 19 அன்று நடந்த சண்டை தொடர்பான வழக்கு விசாரணையில் மொத்தம் 11 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அச்சண்டை காட்சிகள் பதிவான வீடியோவைத் தொடர்ந்து ஒரு பெண் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டதாக மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுப்ரிட்டன் முகமட் சோஹைமி இஷாக் கூறினார்.

இரவு 11.05 மணியளவில் மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட அந்நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

“சம்பவம் நடந்த நாளில் அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டனர், மேலும் கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் 13 முந்தைய குற்றப் பதிவுகள் மற்றும் மூன்று போதைப்பொருள் தொடர்பான பதிவுகள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

மேலும், கைது செய்யப்பட்ட 11 நபர்களில் ஒருவர் இரண்டு போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டவர் என்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 22ஆம் தேதி ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டத்தின் 148 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒன்பது நபர்களுக்கு RM2,000 அபராதம் அல்லது ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :