SELANGOR

ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்திற்குப் புதிதாக 574,886 விண்ணப்பங்கள்- பிரதமர் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 28- ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்திற்கு
(எஸ்.டி.ஆர்.) இதுவரை 574,886 புதிய விண்ணப்பங்கள்
கிடைக்கப் பெற்றுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.

முதல் கட்ட எஸ்.டி.ஆர். திட்டத்தின் கீழ் 87 லட்சம் பேருக்கு 167 கோடி
வெள்ளி கடந்த ஜனவரி மாதம் 17ஆ தேதி பகிர்ந்தளிக்கப்பட்ட வேளையில்
இரண்டாம் கட்ட நிதியளிப்பு வரும் ஏப்ரல் 5ஆம் தேதியும் மூன்றாம் கட்ட
நிதியளிப்பு ஆகஸ்டு அல்லது அக்டோபர் மாதத்திலும் வழங்கப்படும்
என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில்
123,243 குடும்பத் தலைவர்கள் பரம ஏழைகளாக வகைப்படுத்தப்பட்டு இ-
காசே திட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டில் இதுவரை இந்த திட்டத்திற்கு புதியவர்கள் சேர்க்கப்படாத
காரணத்தால் பரம ஏழைகளின் எண்ணிக்கையை 130,000 ஆக உயர்த்த
நான் முடிவெடுத்துள்ளேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சமீபத்திய நிலவரங்கள் மற்றும் அனைத்துத் துறைகளின் திறன்
அடிப்படையில் பரம ஏழைகள் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என
நம்புகிறேன் என்று அவர் மக்களவையில் இன்று அமைச்சர்களின் கேள்வி
பதில் அங்கத்தின் போது கூறினார்.

வறுமையை ஒழிப்பதில் ஒற்றுமை அரசாங்கம் மேற்கொண்டு வரும்
திட்டங்கள் மற்றும் அதன் ஆக்கத் தன்மை குறித்து ஜெலுபு உறுப்பினர்
டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்
அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :