NATIONAL

ஒற்றுமை அரசு மாநிலங்களை ஒடுக்குகிறது என்ற குற்றச்சாட்டு நிறுத்தப்பட வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

ஷா ஆலம், மார்ச் 29- ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்காத மாநிலங்களை
மத்திய அரசு ஒடுக்குகிறது எனக் கூறப்படுவது அடிப்படையற்ற
அவதூறான குற்றச்சாட்டாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் தம்மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்பட்ட போதிலும் அனைத்து மாநிலங்களின் நலனிலும்
ஒற்றுமை அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது என்று
நிதியமைச்சருமான அவர் சொன்னார்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை. எதிர்க்கட்சி
மாநிலங்களான கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடாவுக்கு
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி முந்தைய மூன்று
அரசாங்கங்களைக் காட்டிலும் அதிகமானவையாகும் என அவர்
தெரிவித்தார்.

விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறோம். சில கருத்துகளைச் செவிமடுத்தப்
பின்னர் சில திருத்தங்கள் அல்லது மாற்றங்களைச் செய்ய நான் தயாராக
உள்ளேன். ஆனால், பொய்யானக் குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும்
என அவர் குறிப்பிட்டார்.

மேலவையில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான விநியோகச் சட்ட
மசோதாவை இரண்டாம் வாசிப்புக்கு தாக்கல் செய்த போது அவர்
இவ்வாறு கூறினார்.

இத்தகைய அவதூறான குற்றச்சாட்டுகள் சில வேளைகளில் உலாமாக்கள்
அல்லது கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களிடமிருந்து வருவது குறித்து
தாம் மிகுந்த ஏமாற்றம் அடைவதாக அன்வார் மேலும் சொன்னார்.
தங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது, தாமதப்படுத்துவது
அல்லது குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் நிதியமைச்சர் மாநிலங்களை ஒடுக்குகிறார் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதில் உண்மை இல்லை. ஆகவே, இதனை விளக்குவது எனது கடமையாகும் என்றார் அவர்.


Pengarang :