NATIONAL

கோள மீனைச் சாப்பிட்டதால் நேர்ந்த விபரீதம்- மனைவி மரணம்- கணவர் கவலைக்கிடம்

குளுவாங், மார்ச் 29- கோள மீன் உணவைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட
பாதிப்பு காரணமாக பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். அவரின் கணவர்
எஞ்சே பெசார் ஹாஜா கல்சோம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தம்பதியர் அந்த மீனை பத்து பஹாட்டில் உள்ள மீன் விநியோகிப்பாளர்
ஒருவரிடமிருந்து பேஸ்புக் மூலம் வாங்கியுள்ளனர். அந்த
விநியோகிப்பாளர் எண்டாவிலுள்ள மீனவரிடமிருந்து அம்மீனைப்
பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் மூச்சுத் திணறல்
மற்றும் உடல் நடுக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளான அந்தப்
பெண்மணி சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் உயிரிழந்ததாக
சுகாதார மற்றும் ஒற்றுமைத் துறைக்கான ஜொகூர் மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் லிங் தியான் சூன் கூறினார்.

அந்த மூதாட்டிக்கு உடல் பாதிப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின்னர்
அவரின் கணவரும் அதே பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார். இச்சம்பவம்
மாநில அரசு மற்றும் மாநில சுகாதாரத் துறையின் கவனத்திற்குக் கொண்டு
வரப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

குளுவாங், ஜாலான் சிம் தியாங்கைச் சேர்ந்த அத்தம்பதியர் கடந்த 25ஆம்
தேதி அந்த மீனை பேஸ்புக் மூலம் வாங்கியுள்ளனர். அந்த மீனைச் சுத்தம்
செய்து பொறித்த அவர்கள், காய்கறிகள் மற்றும் பன்றி இறைச்சியுடன்
சேர்த்து அதனை உட்கொண்டுள்ளனர் என்றார் அவர்.

அந்த தம்பதியர் இந்த வகை மீனைச் சமைத்துச் சாப்பிட்டது இதுவே
முதன் முறை என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


Pengarang :