NATIONAL

தானியங்கி கதவு செயல்படவில்லை- ஏ.டி.எம். அறையில் சிக்கிய வாடிக்கையாளர்கள் தத்தளிப்பு 

மெர்சிங், ஏப் 3- இங்குள்ள வங்கி ஒன்றின் தானியங்கி பண பட்டுவாடா இயந்திர (ஏ.டி.எம்.) அறையின் தானியங்கி கதவு திறக்காத காரணத்தால் இரு வாடிக்கையாளர்கள் வெளியில் வர முடியாமல் அரை மணி நேரம் தத்தளித்தனர்.

அந்த வங்கியின் ரோலர் ஷட்டர் எனப்படும் தானியங்கி கதவு இயல்பாக மூடிக்கொண்டது தொடர்பில் பின்னிரவு 12.10 மணி அளவில் தாங்கள் அவசர அழைப்பு பெற்றதாக மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் ரசாக் அப்துல்லா சானி கூறினார்.

இப்புகாரைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக காவல் துறையின் ரோந்து வாகனமும் தீயைணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் சொன்னார்.

எனினும், சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு விரைந்து வந்த வங்கி பணியாளர்கள் கதவைத் திறந்து அவ்விருவரும் வெளியே வர உதவினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

வங்கிகளின் சேவை நேரம் மற்றும் வங்கியின் கதவுகள் இயல்பாக மூடி கொள்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் தொடர்பான அறிவிப்புகளை வாடிக்கையாளர்கள் படித்துத் தெரிந்து கொள்ளும் அதேவேளையில் அதனைப் பின்பற்றி நடக்கமாறு அவர்  கேட்டுக் கொண்டார்.

வங்கியில் இருவர் சிக்கிக் கொண்டிருப்பதையும் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தில் இருப்பதையும் சித்தரிக்கும் 18 விநாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.


Pengarang :