NATIONAL

கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டே பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கு 13 பழைய குற்றப்பதிவுகள் 

புத்ராஜெயா, ஏப் 3- பினாங்கிலிருந்து ஈப்போவுக்குப் பேருந்தை செலுத்திய போது கைபேசியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஓட்டுநருக்கு எதிராக சாலை போக்குவரத்து இலாகா குற்றப்பதிவை வெளியிட்டுள்ளது.

அந்த ஆடவர் செலுத்திய பஸ் பட்டர்வெர்த்திலுள்ள ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஜைலானி ஹஷிம் கூறினார்.

வாகனத்தைச் செலுத்திக் கொண்டே கைப்பேசியைப் பயன்படுத்தும் செயல் கடும் குற்றமாகக் கருதப்படும். இதனால் விபத்து ஏற்படுவதற்கும் பஸ் பயணிகள் மற்றுமின்றி நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் இதர வாகனமோட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கும் சாத்தியம் உள்ளது என்று அவர் சொன்னார்.

பஸ் ஓட்டுநர் ஒருவர் தனது முழங்கையினால் ஸ்டியரிங்கை அழுத்திய நிலையில்  இரு கைளால் கைபேசியை பயன்படுத்திக் கொண்டே பஸ்சை செலுத்துவதைச் சித்தரிக்கும் 20 விநாடி காணொளி சமூக ஊடங்களில் பகிரப்பட்டு வந்தது.

இச்சம்பவம் குறித்து மேலும் விவரித்த டத்தோ ஜைலானி, சம்பந்தப்பட்ட பஸ் ஓட்டுநருக்கு 13 பழைய குற்றப்பதிவுகள் உள்ளதாகவும் அவரின் வாகனமோட்டும் லைசென்சை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Pengarang :