NATIONAL

கால்பந்தாட்டத்திற்குப் பின் கலவரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

ஜோர்ஜ் டவுன், ஏப் 3- இங்குள்ள ஸ்டேடியம் பண்டாராவில் நேற்றிரவு
நடைபெற்ற பினாங்கு எப்.சி. மற்றும் பேராக் எப்.சி.
குழுக்களுக்கிடையிலான கால்பந்தாட்டத்திற்குப் பின்னர் அரங்கிற்கு
வெளியே கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் மூன்று ஆடவர்களைப்
போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபது முதல் இருபத்து மூன்று வயது வரையிலான அந்த மூன்று
ஆடவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் போதைப்
பொருளைப் பயன்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது என்று தீமோர்
லாவுட் மாவட்டப் போலீஸ் தலைவர் சோபியான் சந்தோங் கூறினார்.

நேற்று முன்தினம் பின்னிரவு 12.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக்
கூறிய அவர், கைதான நபர்களில் ஒருவர் முந்தையக் குற்றப்
பின்னணியைக் கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது
என்றார்.

விசாரணைக்குப் பின்னர் அம்மூவரும் போலீஸ் ஜாமீனில்
விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடபுர்டைய இதர நபர்களைத்
நாங்கள் தொடர்ந்து தேடி வருகிறோம் என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 147வது
பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்றார் அவர்.

கால்பந்து ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவதை சித்திரிக்கும் 31 விநாடிகள்
காட்சிகளை அமிகோஸ் மீடியா வைரல் எனும் பேஸ்புக் பக்கம்
ஒளிபரப்பியது.


Pengarang :