NATIONAL

மலேசியாவில் வட்டார மையத்தை அமைக்க சீனாவின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்

புத்ராஜெயா, மார்ச் 3- மலேசியாவை தங்களின் வட்டார மையமாக உருவாக்க சீனாவின் சில முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

இந்த திட்டம் தொடர்பான விரிவான விபரங்களைத் தாம் விரைவில் வெளியிடவுள்ளதாக இன்று இங்கு நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் சொன்னார்.

வழக்கமாக அவர்களின் வட்டார மையங்கள் பிற நாடுகளில் அல்லது அண்டை நாடுகளில் அமைக்கப்படும். இப்போதுதான் முதன் முறையாக சில சீன நாட்டு நிறுவனங்கள் தங்களின் பிராந்திய மையத்தை மலேசியாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் தங்களின் தளங்களை அமைக்கும் போது இங்குள்ள திறன் பெற்ற பணியாளர்களை வேலைக்கமர்த்துவதற்கு அந்நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன. வழக்கமாக, இந்நாட்டில் தங்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் போது தங்களின் சொந்த நாட்டு ஊழியர்களை வேலைக்கமர்த்துவது அந்நிறுவனங்களின் வழக்கமாகும் என்றார் அவர்.

எனினும், உள்நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் தங்கள் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டதை அவர்கள் நிருபிக்கும் பட்சத்தில் சீனாவிலிருந்து தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான அனுமதியை விரைந்து வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அவர் சொன்னார்.

சீனாவிலிருந்து நிபுணர்களை வரவழைப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னர் உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு ஏதுவாக புரோட்டேன் போன்ற நிறுவனங்களில் பணிமனை பயிற்சி மையங்களை அமைக்கும்படி அந்நிறுவனங்களைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :