NATIONAL

ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்சனையில், அனைவருக்கும் வெற்றிகரமான தீர்வை எட்ட   அரசாங்கம்   முயல்கிறது

கோலாலம்பூர், ஏப்ரல் 3: ஒப்பந்த மருத்துவர் பணியிட பிரச்சினையில் எந்த  தரப்பும்  நஷ்டம் அடையாமல் அல்லது விடுபடாமல் அனைவருக்கும் வெற்றிகரமானதாக  அமைவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உயர்மட்டக் குழுவின் தலைவரான அஹ்மட் ஜாஹிட், இது தொடர்பான விவரங்களை விரைவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாக கூறினார்.

 “நாம் பேசி தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை. இந்த பிரச்சனை நீண்டகால பிரச்சனை என்பதை நான் அறிவேன், ஆனால் அது தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுகாதார அமைச்சகம், பொது சேவைத் துறை மற்றும் பொது சேவை ஆணைக்குழுவை உள்ளடக்கிய சிறப்புக் குழு ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவது உள்ளிட்ட பல பரிந்துரைகளை விவாதித்ததாக புறநகர்  மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அஹ்மத் ஜாஹிட் தெரிவித்தார்.

“புதிய திட்டத்தின் மூலம் பல விதிமுறைகள் விவாதிக்கப்படும், எனவே அவர்கள் (ஒப்பந்த மருத்துவ ஊழியர்) அவற்றைத் தீர்ப்பதற்கான குழுவின் தலைவராக என்னை நம்புவதற்கான வாய்ப்பை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, நிலுவையில் உள்ள வேலைவாய்ப்பு பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒப்பந்த மருத்துவர்கள் குழுவொன்று நாளை முதல் புதன்கிழமை வரை நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


– பெர்னாமா


Pengarang :