NATIONAL

தானியங்கி பணப் பரிவர்த்தனை இயந்திரத்தின் (ஏடிஎம்) திரையை உடைத்த நபர் கைது

இஸ்கண்டார் புத்திரி, ஏப். 3: இஸ்கண்டார் புத்திரி தாமான் நுசா பெஸ்தாரியில் இன்று அதிகாலை தானியங்கி பண பரிவர்த்தனை இயந்திரத்தின் (ஏடிஎம்) திரையை உடைத்து முறையற்ற செயலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இஸ்கண்டார் புத்திரி மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ரஹ்மத் அரிஃபின் கூறுகையில், 35 வயதான அந்த உள்ளூர் நபர், அதிகாலை 3.15 மணியளவில் மது போதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

பண பரிவர்த்தனை செய்யும் போது வங்கி அட்டையை இயந்திரம் திருப்பித் தராததால் கோபமடைந்த அந்த நபர் இவ்வாறு நடந்து கொண்டதாக அவர் கூறினார்.

“இஸ்கண்டார் புத்திரி மாவட்டத்தின் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவின் (URB) உறுப்பினர்கள் அச் சந்தேக நபரை வெற்றிகரமாகக் கைது செய்துள்ளனர்.

“ஆத்திரம் காரணமாக வங்கியில் இருந்த ஏடிஎம் இயந்திரம் ஒன்றின் திரையைச் சந்தேக நபர் உடைத்து, சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்த வங்கி ரசீதுகள் அடங்கிய குப்பைத் தொட்டியை உதைத்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 427ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

– பெர்னாமா


Pengarang :